Saturday, 19 March 2011

"ழ" என்கிற கனவின் விதை

இளமை எனும் வாழ்வின் வஸந்தபருவத்தில் ஒவ்வொருவருமே கண்கள் முழுக்க கனவுகள் நிரப்பித்தான் திரிவார்கள். காதலைச் சுமந்த கனவுகள், வாழ்க்கையைச் சுமந்த கனவுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கனவுகள்... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதக்கனவு. வர்ணங்களில் மின்னும் கனவுகள் காலவெள்ளத்தில் சாயமிழந்து கறுப்புவெள்ளையாய்த் தேய்ந்துபோவதுதான் பெரும்பான்மையாக இருக்கின்றது. "எனக்கு ஒரு கனவு இருக்கின்றது" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகம் போலவே எங்களுக்கும் ஒரு கனவு இருந்தது. புதிய யுகத்துக்கான மகரந்தங்களைச் சுமந்து வரும் ஒரு பத்திரிகைப்பூவை முகிழ்க்கவைப்பதே அந்தக் கனவு.வாழ்வின் லட்சியங்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் இதுவும் வெறும் கனவாகத்தான் போய்விடுமோ எனக்கவலை கொண்ட பொழுதில் நாம் ஏன் ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். அதுபற்றி விசாரித்தால் அது தமிழ் கூறும் நல்லுலகில் தற்கொலைக்குச் சமமான விசயம் என எச்சரித்தபோது எங்களுக்கு இதன் மேலிருந்த சுவாரசியம் கூடிப்போனது. இங்கு நாங்கள் என்பது நானும் என் மாப்பிள்ளையும் பதிவரும் ஆன தஞ்சாவூரான் என்கிற ராஜாவும். 

எனவே நெருங்கிய நண்பர்களான கேபிளையும், விந்தைமனிதனையும்கூப்பிட்டுப் பேசியதில் அவர்கள் தந்த உற்சாகத்தால் நாங்களும் பதிப்பகத் தொழிலில் இறங்கிவிட்டோம். எங்கள் பதிப்பகம் என்ற விதையின் முதல் தளிராக கேபிள்சங்கரின் "மீண்டும் ஒரு காதல் கதை" என்கிற குறுநாவலையும் அத்துடன் அவரின்  22 சிறுகதைகளையும் சேர்த்து முதல் புத்தகமாக வெளியிட இருக்கிறோம். எங்களின் அடுத்த வெளியீடு எனது "பணம்" தொடர். இதில் மிகுந்த மகிழ்ச்சியான விசயமே முதல் புத்தகம் "மீண்டும் ஒரு காதல் கதை" அச்சில் இருக்கும்போதே நூறு புத்தகங்களுக்கான ஆர்டர் கிடைத்து விட்டதுதான்.

கூடிய விரைவில் எங்களின் முதல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பை எல்லோருக்கும் அனுப்புகிறோம். பதிவுலக நண்பர்களின் எழுத்துக்கு முன்னுரிமை தரலாம் என்றிருக்கிறோம். எனவே பதிவுலக நண்பர்கள் தங்கள் படைப்புகளை எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிட விரும்பினால் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் படைப்புகளை எங்களின் ஆசிரியர் குழுவினர் பரிசீலித்தபின் உங்கள் படைப்புகளைக்  கண்டிப்பாக பதிப்பிக்கிறோம்.


எங்களது ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள எங்களது நண்பர்கள் விந்தைமனிதன் என்கிற ராஜாராமனுக்கும், கேபிள்சங்கர்என்கிற சங்கர் நாராயணுக்கும் எங்களது நன்றிகள்..

நிறைய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். "ழ" என்கிற பெயரில் ஊன்றப்பட்டு அது தன் முதல் தளிரை முகிழ்க்கும் தருணத்தில் "ழ"வை நண்பர்களும் பதிவர்களுமான உங்களிடம் ஒப்படைக்கிறோம். இது கிளைவிரித்து விண்ணளக்கவும், வேர்பரப்பி மண் சிறக்கவும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். 

No comments:

Post a Comment